Monday, 15 August 2011

தமிழ் மறுமலர்ச்சி

மலர்ச்சி இரண்டு 
(தொடர்ச்சி...)
   ஆங்கிலம் இன்று உலகப் பொதுமொழியாகக் கருதப்படுகிறது. ஆங்கிலேயரை இந்நாட்டிலிருந்து விரட்டியவர்கள்கூட ஆங்கிலத்தை கண்ணும் காதுமாகக் கருதி, ஆங்கிலத்தை விடமாட்டோம் என உறுதியோடு உள்ளனர். உலக மக்களுள் பத்தில் ஒரு பகுதியினர் ஆங்கிலத்திற்கு உரியவராய் இருக்கின்றனர். இன்று இத்தகைய உயர் நிலையைப் பெற்றுள்ள ஆங்கிலம் ஒரு காலத்தில் அதன் நாட்டிலேயே இகழப்பட்டது. இலத்தீன் மொழியும், பிரஞ்சு மொழியும் ஆங்கிலத்தின் இடத்தில் அமர்ந்து அரசு ஆண்டன. பின்பு ஆங்கிலேயரிடத்தில் எழுந்த மொழிப் பற்று வேற்று மொழிகளை அகற்றி ஆங்கிலத்திற்கு உரிய இடத்தை வழங்கியது.
   தமிழ் வளர்ச்சி பற்றியும், பிற சொற்கலப்பினால் வரும் நன்மை பற்றியும் கூறும் பலர்க்கு தமிழ்மொழி வரலாறும் ஆங்கில மொழி வரலாறும் தெரியாது. தெரிந்திருந்தால் பிறமொழி கலப்பால்தான் மொழி வளரும், அஃதே உண்மை மறுமலர்ச்சி என்று சொல்லமாட்டார்கள்.
   மொழி சிறப்புற மொழிக்குரியோர் சிறப்புற வேண்டும். உலகப் பொது மொழி என்னும் நிலையை இன்று ஆங்கிலம் அடைந்ததற்குக் காரணம் ஆங்கிலேயர்கள்தான். ஆங்கிலேயர்கள் ஆட்சித் துறையிலும், அறிவியல் துறையிலும், வணிகத்துறையிலும், நாட்டுப் பற்று, உரிமைப் பற்று, மொழிப் பற்று முதலியவற்றில்  சிறந்து விளங்கியதால்தான் ஆங்கிலம் சிறப்புற முடிந்தது. ஆக, தமிழ் சிறப்புற வேண்டுமென்றால் தமிழர்கள் அனைத்துத் துறைகளிலும் சிறப்புற வேண்டும்.
   நமக்கு பயன்படுகின்றவற்றுள் முதன்மையானது மொழி. நாட்டு வரலாறு,அறிவியல் முன்னேற்றம்,பொருளியல், அரசியல் முதலியன போன்று நம் மொழி மொழி இயல்பு, தோற்ற்றம், வளர்ச்சி பற்றியும் தவறாது அறிய வேண்டும் என்று தமிழர்கள் நினைக்க வேண்டும்.
   நம் எண்ணத்தையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்தவும், தொழிலையும் அரசினையும் நடத்தவும் துணையாக இருப்பது மொழிதானே? நாம் இன்னார் என்பதை தெரிவிப்பதற்கும், பிறர் இன்னார் என்பதை அறியவும் இன்றியமையாது தேவைப்படுவது மொழிதானே? ஆகவே, தமிழைப் பற்றி தமிழர் அனைவரும் அறிந்து இருத்தல் வேண்டும்.
தமிழ் மொழியின் சிறப்புகள்
   தமிழ் மொழிஇனிமையானது;

                                                                                                                             மலரும்...

Monday, 1 August 2011

தமிழ் மறுமலர்ச்சி

மலர்ச்சி இரண்டு
   தமிழ் என்று தோன்றியது என்று கால வரையறுக்க  முடியாது. அஃது இனிய இலக்கியங்களையும் பண்பட்ட இலக்கணத்தையும் பெற்றிருப்பதனால் மட்டும் சிறப்புடையது அன்று. மொழி என்ற அளவிலும் அதனின் இனிமைப் பண்பாலும், எளிமை அமைப்பாலும் கற்போர் உள்ளத்தைக் கவரக்கூடியது. தீந்தமிழ்  என்றும் இன்பத்தமிழ் என்றும் சொல்லுவதற்கேற்ப அமைந்துள்ளது. அதன் வடிவ அமைப்பே உயிருக்கு இன்பம் அளிக்கக்கூடியது. அதனுடைய சொற்களின் சொற்பொருள் சிறப்பும் அதன் உயர் இலல்புகளுள் முதன்மையானது.
   ஆரியம் இந்நாட்டிற்கு வருவதற்கு முன்னர்த் தமிழ் பரத கண்டம் முழுவதும் பரவியிருந்தது. ஆரியம் வந்த பின்னர் தமிழை வழங்கும் பரப்பளவு சுருங்கிக்கொண்டே வந்தது. தொல்காப்பியர் காலத்தில் வடவேங்கடம் தென்குமரியிடை மட்டும் வழங்கியது. 
   இசை, ஆட்சிப் போன்ற துறைகளில்  பிற மொழிகளின் ஆதிக்கத்தால் வீட்டளவிலும் நற்றமிழ் ஆட்சி பெற்றிராது கலப்புத் தமிழ், உருகுலைந்த த்காமிழ் என்ற நிலையிலேயே இன்று உள்ளது.
   ஆயினும்  தூய தமிழ்ப் பற்று உண்மைத்தமிழ்ப் புலவர் உள்ளங்களில் மறைந்துவிடவில்லை. நற்றமிழர்களும் அதனைப் போற்றினர். ஆங்கிலம் கற்ற தமிழர்களும் தூய தமிழே நற்றமிழாகும் என்னும் கருத்தை ஏற்றனர். சாமி.வேதாசலம் என்னும் தனித்தமிழ்ப் புலவர்த்  தம் பெயரை மறைமலை அடிகள் என மாற்றினார். "இழந்த தமிழை மீட்போம்" என உறுதி பூண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கம், தமிழ் நலம் காக்கும் பணியில் தலைப்பட்டது. தமிழ்ப் பொழில் எனும் திங்களிதழை  வெளியிட்டது. ஆண்டுதோறும் ஆண்டு விழாக்கள் நடத்திப் புலவர்ப் பெருமக்களைக் கொண்டு தூய தமிழ்ச் சொற்பொழிவுகள் நிகழ்த்தச் செய்தது. செந்தமிழ்ச் செல்வி போன்ற இதழ்களும் வெளிவந்தன.
   'இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' போன்ற முழக்கங்கள் எழுந்தன. எங்கு நோக்கினும் இன்பத்தமிழ், செந்தமிழ்; இதழ்களில் செந்தமிழ்; மேடைப்பேச்சுகளில் நற்றமிழ்; மாநாடுகளில் வண்டமிழ் ; 'நற்றமிழ் பேசுதலே நற்புலமைக்கு அழகு' என்ற எண்ணம் வலுபெற்றது.
   தமிழ் என்னும் நறுமணக்கொடி கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் நாள்தோறும் நன்மலர்களைப் பூத்துக்கொண்டிருந்தது. பின்னர், பல்வேறு சூழ் நிலைகளால் பூக்கும் தன்மையை இழந்து பூவாத கொடியாகக் கருதும் நிலையை அடைந்தது. இப்போது மீண்டும் பூக்கத்தொடங்கியுள்ளது; மலர்கள் மணம் கமழத்  தொடங்கியுள்ளன. தமிழ் என்னும் பழங்கொடி மறுமலர்ச்சியைப் பெற்றுள்ளது.

                                                                                                                       மலரும்...