Tuesday, 10 January 2012

பொங்கல் பெருவிழா - தமிழர்த் திருவிழா

   பொங்கல் பெருவிழா, உழவர் விழா, உழைப்பாளர் விழா என்றெல்லாம் கொண்டாடப்படுவது உழைப்பின் பெருமையை உரைக்கும் விழா.  உழவர் என்பது உழவுத் தொழில் செய்பவரைக் குறித்தாலும், வருந்தி உழைக்கும் அனைவரும் உழவரே ஆவர்.  உழவு உடையவன் உழவன்; உழைப்பவன் உழவன்.  உழவு எனுஞ்சொல்லுக்கு உழைத்தல் என்பது பொருள்.
               சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
               உழந்தும் உழவே தலை.                                       -குறள் (1031)
 எனும் குறள் இதனை தெளிவு செய்யும்.


   உழவுத் தொழில் செய்யாமல் மற்ற தொழில் செய்கின்றவர் எல்லாரும் உழவுத் தொழில் செய்கின்றவரைத் தாங்குவதால் இந்நாள் உழவர்க்கே உரிமை உடையதாயினும் உலகு புரக்க உழைப்பவர் அனைவருமே தேவை என்பதால் மற்ற உழைப்பாளர்களும் போற்றுகின்ற நாளாகிறது பொங்கல் பெருநாள்.
    உழவு தவிர மற்றவை அனைத்தும் தொழில் என்னும் சொல்லால் குறிக்கப்படும். எனவே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு உழவு வளமும் தொழில் வளமும் இன்றியமையாதன ஆகின்றன. ஆகவே, உழவும் தொழிலும் ஒரு நாட்டின் இரு கண்கள் எனலாம்.  அதனால்தான் புரட்சிப் பாவலர் பாரதிதாசன்,  "உழவே தலை என்றுணர்ந்த தமிழர் விழாவே இப்பொங்கல் விழாவாகும்" என்று பாடிப் போற்றியுள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் விழா உழவையும் தொழிலையும் போற்றிப் பேணிப் பின்பற்றிப் பரப்புகின்ற பெருநாளாகும்.

        சுறவம் ௧(தை 1) :  பொங்கல் விழா, உலகை வாழ்விக்க வந்த உழவர்-உழைப்பாளர் விழா

   இவ்வாறு உழவுத் திருநாள், உழவர் திருநாள், உழைப்பாளர் உயர்வு நாள், பொங்கல் பெருநாள், தமிழர் திருநாள், தமிழகத் திருநாள் என்னும் சிறப்புக்குரிய பொங்கல் பெருவிழாவை, தமிழர் திருவிழாவை ஒரு கிழமை (வார) விழாவாக கொண்டாடல் வேண்டும் என்று தமிழகப் புலவர் குழு முடிவு செய்து தமிழ்நாட்டுக்கும் மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தது.


   ௧௯௩௧-இல் (1931இல்) திருச்சியில்  தந்தை பெரியார் அவர்களால் கூட்டப்பட்ட மாநாட்டில் தமிழ்க் கடல் மறைமலையடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி.க., தமிழ்க் காவலர் கா.சு. பிள்ளை போன்ற தமிழ் அறிஞர்கள் எல்லாம் கூடி, பொங்கல் விழா தமிழர் விழா - மதச்சார்பற்ற விழா என்பதை நாட்டுக்கு அறிவித்தனர்.
   ௪௯(49)  தமிழ் அறிஞர்களும் புலவர்களும் சான்றோர்களும் கொண்ட தமிழகப் புலவர் குழு ௦௯.௦௫.௦௯௭௧ (09.05.1971)ஆம் நாள் திருச்சியில் நடந்த குழுவின் முப்பதாம் கூட்டத்தில் பொங்கல் பெருநாள் ஒரு கிழமை விழாவாகக் கொண்டாடல் வேண்டும் என்ற முடிவு செய்தது.

                          தமிழர் திருநாள் - பொங்கல் பெருநாள்
         மார்கழி இறுதி நாள்     :   போகி விழா
          சுறவம் ௧ (தை 1)         :   தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா
          சுறவம் ௨ (தை 2)        :   திருவள்ளுவர் விழா
          சுறவம் ௩ (தை 3)         :   உழவர் விழா
          சுறவம் ௪ (தை 4)         :   இயல் தமிழ் விழா
          சுறவம் ௫ (தை 5)        :   இசைத்தமிழ் விழா
          சுறவம் ௬ (தை 6)         :   நாடகத் தமிழ் விழா


               தமிழர் திருநாள் கொண்டாடுவோம் - நாளும்
               தமிழ் வளர்த்து உலகப் புகழ் சூடுவோம்.

   பொங்கல் பெருவிழா, தமிழ் கூறும் நல்லுலகின் தேசியத் திருவிழா. உலகில் ௫௭ (57) நாடுகளில் வாழ்கின்ற ஏழரை கோடி தமிழின மக்கள் சாதி, மதம், நிறம், கட்சி, அரசியல், நாடு வேறுபாடு இல்லாமல் பண்பாட்டு அடிப்படையில் கொண்டாடுகின்ற தமிழர் திருவிழா. எனவே பொங்கல் பெருவிழா தமிழர் திருவிழா என அழைக்கப்படுகின்றது. தமிழர் திருநாள் - பொங்கல் பெருநாள் தமிழ் மொழியை, தமிழ் இனத்தை, தமிழ் நிலத்தை என்றும் தாழ்த்தாத, வீழ்த்தாத நாளாக இருப்பதாளது தமிழர்களின் பெரிய விழாவாகவும் பெருமைக்கும் புகழுக்கும் உரிய விழாவாகவும் இருப்பதால் பெருவிழா என்று அழைக்கப்படுகின்றது.
   தூய்மை, துப்புரவு, உழவு, உழைப்பு, நன்றியறிதல்,  மழை,ஞாயிறு போற்றல் ஆகியவற்றின் சீரும் சிறப்பும் உரைக்கும் விழா.
   போகித் திருநாள், பொங்கல் புத்தாண்டுப்  பெருநாள்  இரண்டும் தமிழின மக்களின் வீட்டு நலனையும் , திருவள்ளுவர் திருநாள் , உழவர் திருநாள்  இரண்டும் தமிழ்நாட்டின் நலனையும் , இயல் தமிழ்த் திருநாள், இசைத் தமிழ்த் திருநாள், நாடகத் தமிழ்த் திருநாள் மூன்றும் முத்தமிழ் நலனையும் போற்றிப்  பேணிக் காத்து வருகின்றன.
  சிந்தனைச் செம்மல்  தந்தை பெரியார்   அவர்களின் எதிர்ப்புக்கு உட்படாதது எதுவுமேயில்லை. ஆனால் அவர் எதிர்ப்புக்கு ஆளாகாது, பாராட்டையும் பெற்றது, பொங்கல் பெருநாள் மட்டுமே. அவர் பாராட்டிப் பரப்பிய ஒரே விழா பொங்கல் பெருவிழா! ஒரே நூல் திருக்குறள்! ஒரே புலவர் திருவள்ளுவர்! தந்தைப் பெரியாரின் பாராட்டு என்பது ஒப்பிலாச் சான்றுதானே.


அனைவருக்கும்  எனது உளங்கனிந்த  பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்


 வான்மழையை, செங்கதிரை, புத்தாண்டை, வள்ளுவத்தை, ஏர் உழவை, முத்தமிழைப் போற்றுகின்ற பொங்கல் பெருவிழாவில் பொங்கும் இன்பம் எங்கும் தங்குக! எங்கும் பரவுக!

                         பார் எங்கிலும் வாழும் தமிழ் உள்ளங்களுக்கு  - இனிய
                             பொங்கல் தமிழிப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



No comments:

Post a Comment