Thursday, 24 November 2011

பனிமலை (இமயம்) வரை தமிழ்!

பரத நாடு
   வரலாற்றுக் காலத்து முன்பு குமரி முதல் பனிமலை (இமயம்)  வரை   தமிழ் பேசப்பட்டது. இதனால் வட இந்தியாவில் வாழும் பல மலைச்சாதி மக்களின் மொழிகளில் தமிழ் கலந்திருக்கிறது. இதனால் அந்த மொழிகளை  "வட திராவிட மொழிகள்"  என்று கூறுவர்.  ஆபுகானித்தானில் மலைச்சாதியினர் கூட தமிழ் கலந்த மொழி பேசுகிறார்கள். ஒரிசாவில் "ஆவுத்" எனும் மலைச்சாதி மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் மொழியும் தமிழில் இருந்து பிறந்ததே. இன்றும் இவர்களின் "ஆவுத்"  மொழியில் பல தமிழ்ச் சொற்கள் வழங்கி வருகின்றன. கல், மீன், பல், நில், தின், மரம் முதலிய தமிழ்ச்சொற்கள் வழக்கில் உள்ளன.



Tuesday, 1 November 2011

ஈழத்தமிழர்க்குத் துணை நிற்போம்!

உணவும் இன்றி உடையும் இன்றிப்
பணமும் உடைமையும் படுக்கையும் இழந்தனர்!
தாயை இழந்து தவிக்கும் குழந்தை!
சேயை இழந்தவர் சிந்தை கலங்குவர்!
கணவனை இழந்தே கதறுவர் மனைவியர்!
பிணங்களின் பெருக்கம்! பெரும்போ ராட்டம்!
எல்லாம் இழந்தே ஏதிலி யாயினர்!
பொல்லாக் கொடுமைப் போரினால் தப்பி
அவலம் உற்றவர் அணுகினர்
அவர்களை நாமும் அரவனைத் திடுவோமே!

இலங்கைத் தமிழர் இன்னல் நீங்கிட
கலங்கும் தாயும் பொங்கி எழுந்திட
நாளைப் பொழுது நமக்கென விடிந்திட
தோளை உயர்த்தினர் ஈழத்தமிழரே!
பாவி சிங்களன் இனவெறிச் செயலால்
பச்சை மழலைகள் பலியா யினரே!
குருதி உடம்பில் சொட்டச் சொட்டக்
காலை இழந்துங் கையை இழந்தும்
துடித்துச் சாகிறான் தமிழன்
துயர்நீக் கிடநம் துணையளிப் போமே!



Sunday, 30 October 2011

ஈழத்தமிழர் இன்னல்!

ஈழத் தமிழரை இன்னல் சூழ்ந்தது!
பாழுஞ் சிங்களப் பகையால் நேர்ந்தது!
ஒடுக்கும் இனமாம் சிங்களப் பேரினம்
கொடுக்கும் துயரும் கொடுநெறி முறையும்
ஆண்ட தமிழரை அடிமை கொண்டது!
மாண்டது தமிழென மகிழ்வு பூண்டது!
வெகுண்டது தமிழினம் விடுதலை வேண்டியே!
மிகுந்தது நெருக்கடி மீள்போ ரினிலே!
வாழ்வை இழந்தே வாடுவார்
தாழ்வை நீக்கவே, தமிழீழம் காண்பாரே!

ஊரினர் அறிவார்; உறவினர் அறிவார்!
பேரரிவாளரும் பெரும்பகை அறிவார்!
பிறந்ததால் ஈழத்தில் இத்துனை துன்பம்!
இறந்தும் விடுதலை ஈழம் பெறவே!
படுதுயர் நெஞ்சே கொஞ்சமோ? பாராய்!
விடிவும் வருமோ விரைந்தே
முடியுமோ இன்னல் முற்றும் தீர்ந்ததே!



Monday, 15 August 2011

தமிழ் மறுமலர்ச்சி

மலர்ச்சி இரண்டு 
(தொடர்ச்சி...)
   ஆங்கிலம் இன்று உலகப் பொதுமொழியாகக் கருதப்படுகிறது. ஆங்கிலேயரை இந்நாட்டிலிருந்து விரட்டியவர்கள்கூட ஆங்கிலத்தை கண்ணும் காதுமாகக் கருதி, ஆங்கிலத்தை விடமாட்டோம் என உறுதியோடு உள்ளனர். உலக மக்களுள் பத்தில் ஒரு பகுதியினர் ஆங்கிலத்திற்கு உரியவராய் இருக்கின்றனர். இன்று இத்தகைய உயர் நிலையைப் பெற்றுள்ள ஆங்கிலம் ஒரு காலத்தில் அதன் நாட்டிலேயே இகழப்பட்டது. இலத்தீன் மொழியும், பிரஞ்சு மொழியும் ஆங்கிலத்தின் இடத்தில் அமர்ந்து அரசு ஆண்டன. பின்பு ஆங்கிலேயரிடத்தில் எழுந்த மொழிப் பற்று வேற்று மொழிகளை அகற்றி ஆங்கிலத்திற்கு உரிய இடத்தை வழங்கியது.
   தமிழ் வளர்ச்சி பற்றியும், பிற சொற்கலப்பினால் வரும் நன்மை பற்றியும் கூறும் பலர்க்கு தமிழ்மொழி வரலாறும் ஆங்கில மொழி வரலாறும் தெரியாது. தெரிந்திருந்தால் பிறமொழி கலப்பால்தான் மொழி வளரும், அஃதே உண்மை மறுமலர்ச்சி என்று சொல்லமாட்டார்கள்.
   மொழி சிறப்புற மொழிக்குரியோர் சிறப்புற வேண்டும். உலகப் பொது மொழி என்னும் நிலையை இன்று ஆங்கிலம் அடைந்ததற்குக் காரணம் ஆங்கிலேயர்கள்தான். ஆங்கிலேயர்கள் ஆட்சித் துறையிலும், அறிவியல் துறையிலும், வணிகத்துறையிலும், நாட்டுப் பற்று, உரிமைப் பற்று, மொழிப் பற்று முதலியவற்றில்  சிறந்து விளங்கியதால்தான் ஆங்கிலம் சிறப்புற முடிந்தது. ஆக, தமிழ் சிறப்புற வேண்டுமென்றால் தமிழர்கள் அனைத்துத் துறைகளிலும் சிறப்புற வேண்டும்.
   நமக்கு பயன்படுகின்றவற்றுள் முதன்மையானது மொழி. நாட்டு வரலாறு,அறிவியல் முன்னேற்றம்,பொருளியல், அரசியல் முதலியன போன்று நம் மொழி மொழி இயல்பு, தோற்ற்றம், வளர்ச்சி பற்றியும் தவறாது அறிய வேண்டும் என்று தமிழர்கள் நினைக்க வேண்டும்.
   நம் எண்ணத்தையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்தவும், தொழிலையும் அரசினையும் நடத்தவும் துணையாக இருப்பது மொழிதானே? நாம் இன்னார் என்பதை தெரிவிப்பதற்கும், பிறர் இன்னார் என்பதை அறியவும் இன்றியமையாது தேவைப்படுவது மொழிதானே? ஆகவே, தமிழைப் பற்றி தமிழர் அனைவரும் அறிந்து இருத்தல் வேண்டும்.
தமிழ் மொழியின் சிறப்புகள்
   தமிழ் மொழிஇனிமையானது;

                                                                                                                             மலரும்...

Monday, 1 August 2011

தமிழ் மறுமலர்ச்சி

மலர்ச்சி இரண்டு
   தமிழ் என்று தோன்றியது என்று கால வரையறுக்க  முடியாது. அஃது இனிய இலக்கியங்களையும் பண்பட்ட இலக்கணத்தையும் பெற்றிருப்பதனால் மட்டும் சிறப்புடையது அன்று. மொழி என்ற அளவிலும் அதனின் இனிமைப் பண்பாலும், எளிமை அமைப்பாலும் கற்போர் உள்ளத்தைக் கவரக்கூடியது. தீந்தமிழ்  என்றும் இன்பத்தமிழ் என்றும் சொல்லுவதற்கேற்ப அமைந்துள்ளது. அதன் வடிவ அமைப்பே உயிருக்கு இன்பம் அளிக்கக்கூடியது. அதனுடைய சொற்களின் சொற்பொருள் சிறப்பும் அதன் உயர் இலல்புகளுள் முதன்மையானது.
   ஆரியம் இந்நாட்டிற்கு வருவதற்கு முன்னர்த் தமிழ் பரத கண்டம் முழுவதும் பரவியிருந்தது. ஆரியம் வந்த பின்னர் தமிழை வழங்கும் பரப்பளவு சுருங்கிக்கொண்டே வந்தது. தொல்காப்பியர் காலத்தில் வடவேங்கடம் தென்குமரியிடை மட்டும் வழங்கியது. 
   இசை, ஆட்சிப் போன்ற துறைகளில்  பிற மொழிகளின் ஆதிக்கத்தால் வீட்டளவிலும் நற்றமிழ் ஆட்சி பெற்றிராது கலப்புத் தமிழ், உருகுலைந்த த்காமிழ் என்ற நிலையிலேயே இன்று உள்ளது.
   ஆயினும்  தூய தமிழ்ப் பற்று உண்மைத்தமிழ்ப் புலவர் உள்ளங்களில் மறைந்துவிடவில்லை. நற்றமிழர்களும் அதனைப் போற்றினர். ஆங்கிலம் கற்ற தமிழர்களும் தூய தமிழே நற்றமிழாகும் என்னும் கருத்தை ஏற்றனர். சாமி.வேதாசலம் என்னும் தனித்தமிழ்ப் புலவர்த்  தம் பெயரை மறைமலை அடிகள் என மாற்றினார். "இழந்த தமிழை மீட்போம்" என உறுதி பூண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கம், தமிழ் நலம் காக்கும் பணியில் தலைப்பட்டது. தமிழ்ப் பொழில் எனும் திங்களிதழை  வெளியிட்டது. ஆண்டுதோறும் ஆண்டு விழாக்கள் நடத்திப் புலவர்ப் பெருமக்களைக் கொண்டு தூய தமிழ்ச் சொற்பொழிவுகள் நிகழ்த்தச் செய்தது. செந்தமிழ்ச் செல்வி போன்ற இதழ்களும் வெளிவந்தன.
   'இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' போன்ற முழக்கங்கள் எழுந்தன. எங்கு நோக்கினும் இன்பத்தமிழ், செந்தமிழ்; இதழ்களில் செந்தமிழ்; மேடைப்பேச்சுகளில் நற்றமிழ்; மாநாடுகளில் வண்டமிழ் ; 'நற்றமிழ் பேசுதலே நற்புலமைக்கு அழகு' என்ற எண்ணம் வலுபெற்றது.
   தமிழ் என்னும் நறுமணக்கொடி கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் நாள்தோறும் நன்மலர்களைப் பூத்துக்கொண்டிருந்தது. பின்னர், பல்வேறு சூழ் நிலைகளால் பூக்கும் தன்மையை இழந்து பூவாத கொடியாகக் கருதும் நிலையை அடைந்தது. இப்போது மீண்டும் பூக்கத்தொடங்கியுள்ளது; மலர்கள் மணம் கமழத்  தொடங்கியுள்ளன. தமிழ் என்னும் பழங்கொடி மறுமலர்ச்சியைப் பெற்றுள்ளது.

                                                                                                                       மலரும்...

Saturday, 30 July 2011

தமிழ் மறுமலர்ச்சி

மலர்ச்சி ஒன்று
   தமிழ், இலக்கிய வளம் மிக்க இனிய மொழி. பண்டைக் காலத்தில் குறைந்த அடிகளையுடைய தனிப்பாடல்கள் பல இயற்றபட்டன. அவை சுவை மிக்க நிகழ்சிகளை வருணித்தன; வாழ்வின் அரிய ஒழுக்கங்களை எடுத்துரைத்தன. அப்பாடல்களைத் தொகுத்துத் தொகை நூல்களாகப்  பிற்காலப் புலவர்கள் அமைத்தனர். அவையே எட்டுத்தொகை நூல்களாயின. தமிழிலுள்ள மிகமிகப் பழமையான இலக்கியங்களான நூற்றுக்கும் மேற்பட்ட வேறு சில பாடல்களைத்  தொகுத்தனர். அவையே பத்துப்பாட்டு நூல்களாயின.
   இலக்கிய வரலாற்றில் அடுத்ததாக ஒரு முழு வரலாற்றைச் சொல்லும் தொடர்நிலைச் செய்யுள்கள் உருவாகின. அவை காப்பியங்கள் எனப்பட்டன. தமிழில் முதன்முதலாகச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சிறந்த காப்பியங்களாகத் தோன்றின. அதன்பின் தோன்றிய காப்பியங்களை அவற்றின் பெருமை நோக்கி, ஐம்பெரும் காப்பியங்கள் என்றும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்றும் பிரித்து அழைத்தனர்.

  ஐம்பெரும் காப்பியங்கள்  : சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி
  ஐஞ்சிறு காப்பியங்கள்  : சூளாமணி, நீலகேசி, உதயண குமார காவியம், யசோதர காவியம், நாக குமார காவியம்
   சீவக சிந்தாமணியை திருத்தக்க தேவர் என்ற சமண முனிவர் பாடியுள்ளார். காப்பியத்தலைவனான சீவகனின் பிறப்பு, இளமை, காதல், வீரம் பற்றியும் அவன் வீடுபேறு அடைந்தமைப்  பற்றியும் இந்நூல் கூறுகின்றது. கற்பனைத் திறனும் வருணனைத் திறனும், படிப்பவர் உள்ளத்தைக் கவரும்வண்ணம்  அமைந்துள்ளது.
   கோவலன்-கண்ணகி கதையைக் கூறுவது சிலப்பதிகாரம். இதனை இளங்கோவடிகள் இயற்றினார். இந்நூலில் முப்பெருங்காண்டங்கள் உள்ளன. சோழ நாட்டுப் பெருமையை புகார்க் காண்டத்திலும், பாண்டிய நாட்டுப் பெருமையை மதுரைக் காண்டத்திலும், சேர நாட்டுப் பெருமையை வஞ்சிக் காண்டத்திலும் வகைப் படுத்தியுள்ளார். தம் கற்பனை வளத்தாலும், கவிதை வன்மையாலும் இந்நூலைச் "சிந்தையை அல்லும் செந்தமிழ்க் காப்பிய"மாக அமைத்துள்ளார்.
   சிலப்பதிகாரம் என்ற காப்பியத்தைத் தொடர்ந்து எழுந்ததொரு காப்பியம் மணிமேகலை. மாதவியுடன் கோவலன் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்குப் பிறந்தவளே மணிமேகலை. இவள் துறவு பூண்டு, புத்த சமயத்தைச் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையினை விரிவாகக் கூறுவதே இக்காப்பியம். இதனைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றியுள்ளார்.
   சமண மத சார்புடைய நூல் வளையாபதி. பௌத்த மத சார்புடைய நூல் குண்டலகேசி. இவ்விரு நூல்களும் தற்போது முழுமையையகக் கிடைக்கப்பெறவில்லை.
   சூளாமணியைத் தோலாமொழித் தேவர் இயற்றினார். சமண மத நூலான நீலகேசியை எழுதியவர் பெயர் தெரியவில்லை. உதயணன் வரலாற்றைக் கூறும் நூலே உதயண குமார காவியம். "உயிர்க் கொலை தீது" என்பதை வலியுறுத்த எழுந்த நூலே யசோதர காவியம்.  நாக குமார காவியம் பெயரளவில் வழங்கப்படுகிறதேயன்றி. அதனைப் பற்றி  எக்குறிப்பும் தெரியவில்லை.
   இவ்வாறு சுவைமிக்க இலக்கிய, இலக்கண நூல்கள் பல தமிழில் தோன்றியுள்ளன. அவை அனைத்தும் தமிழின் சிறப்பினையும், பெருமையிணையும் என்றென்றும் நிலைநாட்டுவன.

                                                                                                                           மலரும்...